‘ஈகோ ராமன்’ திரைப்பட விமர்சனம்

பள்ளி தலைமை ஆசிரியரான ரோபோ சங்கர், நான் என்ற எண்ணம் மற்றும் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று நினைக்கும் பெருமை மனப்பாங்கு கொண்டவர். தன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் சிபி புவனச்சந்திரன். அவருக்கு கல்லூரி மாணவி கீர்த்தனா மீது காதல் வருகிறது. இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சிபி புவனச்சந்திரன் தன் பள்ளி காலத்தில் முன்மாதிரியாக நினைத்த ஆசிரியரான ரோபோ சங்கரை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சந்திக்கிறார். தனது வழிகாட்டி மற்றும் ஊக்கமளித்து தன் வாழ்வில் கல்வி வெளிச்சத்தை கொடுத்த ஆசிரியரை பல வருடங்களுக்குப் பிறகு பார்த்ததால் மகிழ்கிறார். ஆனால், அவரது மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரோபோ சங்கரின் ஆணவம் மற்றும் அகந்தை குணத்தால் சிபி புவனச்சந்திரன் அதிர்ச்சியடைந்து மனதளவில் பாதிக்கப்படுகிறார்.

இதனால், ஆசிரியருக்கும் – மாணவருக்கும் இடையே மனதளவில் பெரும் யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தில் வென்றது மாணவரா? ஆசிரியரா?, அரசு தேர்வில் வெற்றி பெற்று அம்மாவின் கனவை சிபி புவனச்சந்திரன் நிறைவேற்றினாரா ?, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க கூடிய தலைமை ஆசிரியர் ரோபோ சங்கர், தனது அகந்தையை கைவிட்டாரா? என்பதை உணர்வுப்பூர்வமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘ஈகோ ராமன்’.

பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராமன் கதாபாத்திரத்தில், தலைப்பின் நாயகனாக நடித்திருக்கும் ரோபோ சங்கர், தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஈகோ ராமனாக அனைத்து விசயங்களிலும் தனது அகந்தை குணத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், ஒரு கட்டத்தில் சைக்கோ ராமான் போல் செய்யும் சில விசயங்கள் அவர் மீது பார்வையாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துவது உறுதி. வில்லத்தனம் கலந்த நடிப்பின் மூலம் ஈகோ ராமன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் ரோபோ சங்கர், சில இடங்களில் அளவுக்கு அதிகமாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிபி புவனச்சந்திரன், அம்மாவின் கனவை நிறைவேற்ற போராடும் ஒரு சாதாரண குடும்ப இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். அவர் காதலை வெளிப்படுத்தும் விதம், அம்மா மீது காட்டும் பாசம் மற்றும் மரியாதை, தன் மனதில் மிகப்பெரிய மரியாதை கொண்ட ஆசிரியரின் மற்றொரு முகத்தை பார்த்து அதிர்ச்சியடையும் தருணம், என்று அனைத்து இடங்களிலும் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை கீர்த்தனா, எளிமையான தோற்றம், இயல்பான நடிப்பு என்று பக்கத்து வீட்டு பெண் போல் வலம் வருகிறார். காதலர் மீது காட்டும் அக்கறை, தந்தையின் மீது இருக்கும் கோபம் என்று தன் உணர்வுகளை கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கவிதா ரமேஷ், படம் முழுவதும் சோகமாக இருப்பதும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர் போல் இயங்குவதும், பெண்களை பலவீனப்படுத்துவது போல் இருக்கிறது. கணவரை இழந்த ஒரு பெண், தன் உழைப்பின் மூலம் பிள்ளைகளை உயர்த்தும் முயற்சியில் ஈடுபடும் போது, கூடுதல் பலத்துடனும், தைரியத்துடனும் இருப்பார்கள், அது அவர்களது பேச்சு, நடவடிக்கை அனைத்திலும் வெளிப்படுவது தான் வழக்கம். ஆனால், கவிதா ரமேஷ் அத்தகைய குணாதியசங்களை வெளிப்படுத்தாமல், பார்வையாளர்களையே சோகமாக்கும் அளவுக்கு சோகமாக வலம் வருகிறார்.

சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜினோ பாபு வறட்சியான நிலப்பரப்புகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதி நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையில் பாடல்கள் இனிமையாகவும், வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரபீனின் பணி திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் கணேசன் நாச்சிமுத்து, மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று நினைக்கும் பெருமை மனப்பாங்கு மற்றும் அகந்தை குணம் கொண்டவர்களுக்கு அறிவுரை சொல்லியிருந்தாலும், அதை எந்தவித வன்மமும் இன்றி அமைதியான மற்றும் நாகரீகமான முறையில் சொல்லியிருப்பதோடு, சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாகவும் சொல்லியிருக்கிறார்.

ஒரு ஆசிரியரின் ஈகோ மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பதை காட்சி மொழியில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து, பல விசயங்களை மறைமுகமாக சொல்லியிருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு புரியும்படியும், யோசிக்கும்படியும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

எளிமையான கதைக்களம், எளிமையான கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் தான் சொல்ல நினைத்ததை அழுத்தமாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து, கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதை மக்களுக்கான படமாக கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘ஈகோ ராமன்’ மக்களை ஈர்க்கும்.

ரேட்டிங் 3/5

ego raman movie reviewego raman reviewtamil movie ego raman reviewஈகோ ராமன் திரைப்பட விமர்சனம்ஈகோ ராமன் விமர்சனம்தமிழ்ப் படம் ஈகோ ராமன் விமர்சனம்